இழுபறிகளுக்கு முற்று- தமிழரசு தேசிய மாநாட்டுத் திகதி அறிவிப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 19ம் திகதி தேசிய மாநாடு நடைபெறும் என்பதை திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான
ச.குகதாசனும் எமது டான் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு திருகோணமலையில் இடம்பெற்றது.

மத்திய குழுவால் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மத்திய குழுவால் முன்மொழியப்பட்ட நிர்வாக உறுப்பினர்களை கட்சித் தலைவர் சி.சிறிதரன், அன்று மதியம் ஒன்றுகூடிய பொதுச்சபையில்
முன்மொழிந்த நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிமொழியப்பட்டது.

இதன் பின்னர் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் ச.குகதாசன் தெரிவு செய்யப்பட்டமைக்கு
பொதுச் சபை அங்கத்தவர்கள் கடும் ஆட்சேபம் வெளியிட்டதோடு, பொதுச் செயலாளர் பதவிக்கு ஞா.ஸ்ரீநேசனின் பெயரையும் பிரேரித்து வாக்கெடுப்பை
நடாத்துமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.இதனால் ஏற்பட்ட குழப்பங்களையடுத்து, கட்சியின் தேசிய மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் பெயர்
பொதுச்சபைக் கூட்டத்தில் பிரேரிக்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளர் பதவியை 1 வருடம் திருகோணமலைக்கும் 1 வருடம் மட்டக்களப்புக்கும் வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

நேற்றைய தினம் வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள், பொதுச் செயலாளர் பதவி தொடர்பில், ஞா.ஸ்ரீநேசன் மற்றும்
ச.குகதாசன் இடையே இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை