மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!




மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று (23-02-2024) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையிலான சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதியின் குறைபாடுகள் மற்றும் கொக்கட்டிச்சோலையில் புதிய நீதிமன்றம் அமைப்பது, நீதி மன்றங்களில் நிலவும் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்திப்பது உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இதன் போது சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அமைச்சருக்கு சுட்டக்காட்டப்பட்டது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த நீதி அமைச்சர் மிக விரைவாக இவர்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, அமைச்சின் உயரதிகாரிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதியது பழையவை