குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை



அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை
தருவதால் மக்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இங்கு வருகை தரும் யானைகள் அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை நகரில் இருந்து வாகனங்கள் மூலம் எடுத்து வரப்படும் குப்பைகள், புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலையத்தில் கொட்டப்படுகிறது.

இவற்றை உண்பதற்கு பெருமளவான காட்டு யானைகள் வருகை தருகின்றன.

யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் 160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாவர உண்ணியான யானைகள், குப்பைகள் ,பொலீத்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் அவற்றின் இறப்பு வீதமும் அதிகரித்து
வருகின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனமெடுத்து, யானை மனித மோதலைத் தவிர்ப்பதோடு, யானைகளின் உணவுப் பாதுகாப்புத் தொடர்பிலும் கவனமெடுக்க
வேண்டும் என சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை