திருகோணமலையில் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு!கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கலப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (14-02-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உதயரூபன் ஐஸ்மன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதுடைய புஷ்பராஜா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


ஐந்து பேர் கொண்ட குழுவினர் பயணித்த படகு இவ்வாறு கவிழ்ந்துள்ளதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சடலத்தை பார்வையிட்டு விசாரணை முன்னெடுத்த பின்னர் உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த ஐவரும் படகில் ஏன் பயணித்தனர் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை