மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08-03-2024) இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த குடும்பஸ்தர்கள் நேற்றையதினம் சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு தமது நண்பர்கள் ஐந்து பேருடன் மட்டக்களப்பு சந்தனமடு ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனர்.


அங்கு பகலுணவு செய்வதற்குத் தாமதம் ஏற்பட்டதனால் மதுபானம் அருந்திவிட்டு குடும்பஸ்தர்கள் இருவரும் மீண்டும் ஆற்றில் குளிக்க சென்ற வேளை சேற்றுக் குழியில் மூழ்கி இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்ட நிலையில் குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உடலங்கள் மீட்கப்பட்டு சந்திவெளி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்திவெளி காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர்.


இதையடுத்து உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவரும் மற்றும் ஒரு குழந்தையின் தந்தையான உழவு இயந்திர சாரதியான 24 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை