நாளை இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பம்!உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19-04-2024) ஆரம்பமாகவுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19-04-2024) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

970 மில்லியன் மக்கள் வாக்களிக்க
முதல் கட்ட தேர்தல் நாளையும் (19), 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயர்.

கட்சி அறிக்கை வெளியீடு
இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


2019 பொதுத் தேர்தலில் மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்தத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு மகத்தான சாதனை. 1980இல் பாஜக இந்து தேசியவாதக் கட்சியாக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை.

நாளை (19) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.


பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது ‘பாரதிய ஜனதாவும்’ தங்களது கட்சி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை