பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்ட புத்தர் சிலை






முல்லைத்தீவில் பிள்ளையார் கோவிலாக இருந்த ஒரு வீதியோர வழிபாட்டிடத்தில் இப்போது பிள்ளையார் சிலையுடன் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

சைவ வழிபாட்டிடங்களை பௌத்த வழிபாட்டிடங்களாக மாற்றி தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இடங்களை சிங்கள மயமாக்கும் ஒர் செயற்பாடாகவே இதனை சமூக நோக்கு நிலையில் நோக்க வேண்டியுள்ளதாக சமூக விடய ஆய்வுகளில் ஈடுபட்டுவோர் குறிப்பிடுகின்றனர்.

நீராவியடிப் பிள்ளையார் கோவில் விடயத்தில் முரண்பட்ட நிலை நீதிமன்ற நடவடிக்கைக்குள்ளாகி அது தொடர்ந்து வரும் நிலையில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதிகளின் சந்திப்பில் உள்ள இந்த பிள்ளையார் ஆலயத்தில் சத்தமின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக மக்களிடேயே இது தொடர்பில் சுட்டிக்காட்டி கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டனர்.


இது தொடர்பில் விரிவாக ஆராய முற்பட்ட போது அரசியல் கட்சி சார்ந்த சிலரது அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது கவலையளிக்கும் விடயமாகும்.

பிள்ளையாரை கோவில் சந்தி 
முச்சந்தியாக அமையும் இந்தச் சந்தி புல்மோட்டை வீதி என அடையாளப்படுத்தும் B60 வீதியுடன் முல்லைத்தீவு வீதி இணைவதால் முச்சந்தியை ஆக்குகின்றது.


இந்தச் சந்தியில் உள்ள தூர இடங்காட்டியின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே இடங்களையும் அவற்றுக்கான தூரங்களையும் அவதானிக்க முடிகின்றது.


முன்னர் பிள்ளையார் கோவில் 
முன்னர் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்திருந்தனர்.அப்போது அந்த வழிபாட்டிடத்தில் புத்தர் சிலை இருக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக கூகுள் காட்டும் கூகுள் வீதிப் படங்களில் உள்ள தரவின் படி பிள்ளையார் மட்டும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.


எப்போது புத்தர் சிலை வைக்கப்பட்டது என்பது தொடர்பில் சரியான தகவல்களை யாரிடமிருந்தும் பெற முடியாதது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னர் சிறிய மரமாக இருந்து இப்போது பெரிய மரமாக வளர்ந்துள்ள ஆலமரத்தின் கீழே பிள்ளையார் சிலையும் காணப்படுகிறது.


நில ஆக்கிரமிப்பின் போது அவற்றைத் தடுத்து நிறுத்தி நிலம் காப்பதற்காக போராடும் அவர்கள் தமிழர் நிலங்கள் முழுமைக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதில் தோல்வியுற்று உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.


குறிப்பாக ஒவ்வொரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் தங்கள் பிரதேசங்கள் தொடர்பிலேயே கருத்தில் எடுக்கின்றனர். அப்படியாயின் அவர்களது அரசியல் கட்சித் தலைமை ஈழம் முழுவதற்குமான செயற்பாடுகளை கச்சிதமாக முன்னெடுக்க வேண்டும்.

எனினும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு ஈழம் தொடர்பான ஈழத்தின் பாரம்பரியம், தமிழ் அரசியல் பழைமை மற்றும் புதுமைக்கு இடையிலான தொடர்பாடல் சிங்கள அரசியல் போக்கு என அரசியல் சார்ந்த புலமை குறைவாக இருப்பதாலேயே மாற்றங்கள் மெதுவாக ஏற்படுவதாக அரசியல் பாட ஆசிரியர் ஒருவர் கருத்துரைத்து இருந்தார்.

முல்லைத்தீவு புல்மோட்டை வீதியின் குறிப்பிட்ட சந்தியில் இனம் காணப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்மை நிலையினை ஆராய்ந்து பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை