👉தமிழ்த்தேசியம் என்றால் என்ன…..⁉️பலர் எம்மை பார்த்துக் கேட்கும் கேள்வி, பலர் சமூகவலைத்தளங்களில் முகநூலில் கேட்கும் ஒரு சொல்லாடல்  இது              தமிழ்தேசியம் என்பது என்ன என்பதை புரிந்துகொள்வது ஒவ்வொரு தமிழருக்கும் நல்லது.
பொதுவாக தமிழ் இளைஞர்கள் தமிழ் யுவதிகள் தமிழ் மாணவர்கள் ஏன் பெரியவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்தேசியம் அரசியலுக்கான சொல் அல்ல ஆத்மார்க்கமான தமிழினத்தின் இருப்புக்கான குறியீட்டுச்சொல்.

தேசியம் என்பது,  ஒரு இனம், தாம் வாழ்தல் பொருட்டு நீண்டகாலமாக ஒரு பாரம்பரிய நிலத்தில், தனியான மொழி, பண்பாடு, கலாசாரம், பொருண்மிய வளம் பொருந்தியதாக காணப்படுதலாகும்.

அதன் விரிந்த உண்மையான உட்பொருள் இன்னும் விசாலமானது. குறித்த பாரம்பரிய நிலத்தில் அவர்களின்  சொந்த நிலம், ஆகாயம் , கடல், வளிமண்டலம், இயல் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அவர்தம் பழக்க வழக்கம், வழிபாட்டு முறைமைகள் என்று அத்தனை விசேட அம்சங்களும்  தேசியத்தின் அர்த்தக் கூறுகளாகும்.

அதன் மெய்ப்பொருள் உணர்த்துவதுதான் தமிழர்கள் தனியான தேசிய இனமாக தம்மை வெளிப்படுத்துவதற்கு காரணம்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் மரபுவழித்தாயக பூமி எனப்படுவதன் அர்த்தம், மேற்சொன்ன அடையாளங்களின் பரிணாமப்  படிமுறையாகும். 

அதாவது தமது அப்பன் அவனது அப்பன் அவனது அப்பன், ஆச்சி அவளது ஆச்சி அவளது ஆச்சி என பரம்பரையாக மேற்சொன்ன அடையாளங்களோடு வாழ்ந்து, அதனை உருக்குலையாமல் அடுத்தடுத்த தலைமுறையாக கடத்திவந்து நம்மிடம் சேர்த்திருப்பதுதான். 

எனவே தமிழர்கள் தமது மரபுவழி தாயக பூமியில், தமிழ் அடையாளங்களோடு தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதால் அவர்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ளுதல் அவசியம்.

தேசிய இனமென்றால்தான் சுயநிர்ணய உரிமையுடன் கூடியதான, அதாவது தங்களைத் தாங்களே நிர்ணயம் செய்து ஆள்வதிற்குரிய தகுதியுடன் பிரிந்து செல்லவோ சேர்ந்திருக்கவோ முடியும்.

தமிழ்தேசியம்

ஒரு தொன்மை வாய்ந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி, தனித்துவமான கலாசாரம், பொதுவான பொருளாதாரம், ஒரு தொடர்ச்சியான வாழ்நிலப்பகுதி இவற்றைக் கொண்டதுதான் ஒரு தேசிய இனம்!

இது உலகம் ஏற்றுக்கொண்ட வரை முறை! ஒரு தேசிய இனத்தின் உணர்வுரீதியான அடையாளம் அதாவது உயிர் மூச்சுதான். 

தேசியம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என்போர் தமது மதங்களுக்குரிய தனித்தனி பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்த போதும் பொதுவான தமிழ் பண்பாட்டு அம்சங்களால் பிணைக்கப்பட்டுள்ளனர்.                                

அதை உணர்ந்த தந்தை செல்வா தமிழர்கள் என்பதை “தமிழ்பேசும் மக்கள்”என ஒரு ஒற்றுமை கருத்தியலை வெளிப்படுத்தினார்.

முக்கியமாக பொதுவான கலை இலக்கிய விழுமியங்கள் உள்ளன. இப்படியான நிலையில் தமிழ் தேசியம் பற்றிய குழப்பம்  ஏற்பட வேண்டியதில்லை.

தேசம் என்றால் ....

ஒரு  நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் அறிஞர் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு நான்கு அடிப்படை தேவைகள் வேண்டும்;-  
                                                                              1•முதல் தேவை தாயக மண்..

2•இரண்டாவது தேவை பொது மொழி..

 3•மூன்றாவது தேவை பொதுப் பொருளியல்..

4•நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. 

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. 

இது போன்ற சில விதி விலக்குகளும் உண்டு..ஈழத்தமிழர்களாகியநாம் பாராம்பரிய்பண்பாட்டு தமிழ் கலாசார வாழ்வுரிமைக்கான அத்தனை குண அம்சங்களையும் கொண்ட தனித்துவமான ஒரு இன அடையாளத்தை கொண்ட மக்கள் எமக்கான சுதந்திரம் ஆளும் வர்க்கமான சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பிரித்தானியரிடம் இருந்து 1948, பெப்ரவரி, 4, ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்த போது உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் தேசிய மக்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை.          

இதனால்த்தான் தந்தைசெல்வாவால் தொடங்கிய அகிம்சைப்போர் தலைவர் பிரபாகரானால் ஆயுதப்போராட்டமாகமாறி தற்போது களத்திலும், புலத்திலும் இராஜதந்திர செயல்பாட்டு அரசியலாக சர்வதேசம் நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது.

“தமிழ்தேசியம்”  என்றால் எமது பறப்புரிமையுடன் கூடிய சுவாசம் என்பதை உணர்ந்து எமது ஒற்றுமை மூலம் எமக்கான நீதி நியாயம் உரிமை சுதந்திரவாழ்வுக்காக சோரம் போகாமல் தமிழர்கள் தமிழ்தேசிய மக்கள் என்ற என்ற உணர்வுடன் ஒன்றுபடுவோம்.

விடுதலை கிடைக்கும் வரை நாம் நாமாக தமிழன் தமிழனாக வாழ்வோம்.
காலத்துக்கு காலம் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் எமது தமிழ்த்தேசிய பலத்தை ஒற்றுமையாக வெளிக்காட்டுவோம்

-பா.அரியநேத்திரன்-
25/04/2024
புதியது பழையவை