மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தின்- பவனி வந்த சித்திரத் தேர்ஈழத்திலுள்ள விநாயகர் ஆலயங்களில் தனித்துவ அடையாளமான அமர்ந்த நிலையிலமைந்த பிரமாண்டமான மிக உயர்ந்த விநாயகர் சிலையை கோபுரமாக கொண்டமைந்த ஆலயம் என பெயர் பெற்று வீதியால் செல்வோரையும் தன்னை தலை நிமிர்ந்து பார்த்து வணங்கி விட்டு செல்ல வழிகோலும் தேற்றாத்தீவு பதியுறை கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தின் 2024 ம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் கடந்த(14-04-2024) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் உற்சவத்தின் 9 ம் நாளாகிய இன்று (22-04-2024)சித்திரத்தேரேறி தேனூர் நாயகன் பவனி வந்த அற்புத கண்கொள்ளாக்காட்சி இடம்பெற்றது.


ஆலய வரலாற்றின் முக்கிய அம்சமாக கொம்புச்சந்தியானுக்கு இவ் வருடமே புதிய அழகிய சித்திரத் தேர் செதுக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் ஆலய வெளி வீதியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

ஆலயத்தின் தனித்துவ அடையாளமாக வரலாறு பேசும் வகையிலான சித்திரத் தேர் அமைக்கப்பட வேண்டும் என ஆலய நிருவாகம் மேற்கொண்ட முயற்சி பலனளித்து பிரமாண்ட தேர் கொம்புச் சந்தியானின் பேரருளுடன் அவனது பக்தர்களின் நிதிப்பங்களிப்புடன் தேர்ச்சிமிக்க சிற்பாச்சாரியாரின் கை வண்ணத்தில் இச் சித்திரத் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச் சித்திரத் தேரின் வெள்ளோட்டம் நேற்று மாலை இடம்பெற்றிருந்ததுடன் இன்று காலை ஆலயத்தில் விசேட புசை வழிபாடுகளை தொடர்ந்து கொம்புச்சந்தியான் தேரிலேறி அமர்ந்திருக்க விநாயகனின் அருளைப்பெற வந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணை முட்ட ஆடி அசைந்து சித்திரத் தேர் அசைந்து வந்த அழகு கண்டு பக்தர்களும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்க ஆலய நிருவாகமும் தேரை செதுக்கிய சிற்பாச்சாரியாரை கௌரவித்து மகிழ்ந்தர்.

கொம்புச்சந்தியானின் 2024 ம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நாளை(23-04-2024) காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
புதியது பழையவை