200 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயதான உதவி கணக்காளரான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கொக்கெய்னுடன் தனது பயணத்தைத் தொடங்கி கட்டாரின் தோஹாவை வந்தடைந்தார். அதன் பின்னர், கட்டார் எயார்வேஸ் விமானமான KR-654 மூலம் நேற்று பிற்பகல் 04.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த பெண் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மா உள்ளிட்ட மசாலா பொருட்கள் அடங்கிய 03 பார்சல்களையும், 02 கிலோ 861 கிராம் எடையுள்ள இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 03 பார்சல்களையும் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்தார்.
அவர் தனது நண்பர் மூலம் இந்த விமானத்தை ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்த விமானங்களுக்கான டிக்கட் மற்றும் இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் 05 நாட்கள் தங்குவதற்கு மேலதிகமாக இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து வழங்க 1,000 அமெரிக்க டொலர்கள் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் சங்கிலிகளின் உரிமையாளர்கள் வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்ததாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்தப் பெண் இதற்கு முன்னர் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு மசாலாப் பொருட்கள் அடங்கிய பார்சல்களில் கொக்கெய்ன் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ளதாக சுங்க அதிகாரிகளிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த சர்வதேச புலனாய்வுப் பிரிவு தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அவற்றைக் கொண்டு வந்த பெண்ணை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.