இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த்தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கடந்தும் கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டுசெல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அதுசார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.
அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன். - என்றார்.