ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம் - சம்பந்தன் வேண்டுகோள்




ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் ஏகமனதான கருத்துக்கு வருகை தந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 19ஆம் திகதி தீர்மானத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன.


இந்த நிலையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை. அக்கட்சிகள் அவ்விதமான அறிவிப்புக்களை செய்வதற்கு முன்னதாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைத்து வீணான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.


தென்னிலங்கைத் தலைவர்களில் யார்? வேட்பாளர் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடு என்ன? அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் என்ன கூறுகின்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்துவருகின்ற மக்கள் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அதிகாரப்பகிர்வினைக் கோரிவருகின்றார்கள் என்பது தென்னிலங்கையின் தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்கள் நாட்டின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ள சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் உள்ளக சுயநிர்ணய உரித்தினை ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணயத்தினைக் கோருவதற்கு இயலுமானவர்களாக இருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.


அந்த வகையில், நாம் அனைத்து சூழல்களையும் ஆழமாக எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை