மாத்தறை - மிதிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு இன்று(27-05-2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தேகம ஆரம்பப் பாடசாலைக்கு தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிசிரிவி காட்சிகளை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், அவர் 20.01.2022 அன்று மிதிகம, துர்கி கிராமத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.