வற்றாப்பளை ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு திரும்பியவர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது!
யாழ்ப்பாணம்  பண்டத்தரிப்பு பகுதியில் பேருந்தொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று (21-05-2024) காலை இடம்பெற்றுள்ளது. 

பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தரிசனத்திற்காக செல்வதற்காக குறித்த பக்தர்கள், ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, தரிசனம் செய்துவிட்டு இன்று காலை  யாழ்ப்பாணம் நோக்கி திரும்பி வந்த நிலையில் பூநகரி பாலத்தினை கடந்து வரும்போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஆறு பேரும் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை