நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாம் எடுத்த நடவடிக்கைகளின் முதன்மையான பயனாளிகள் இலங்கையின் பொது மக்களே என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். தொழிலை இழந்து சொத்துக்களை அடகு வைத்து நிலத்தை விற்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
அதற்காகவே, பணம் கீழ் மட்டம் நோக்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். ரூபாவை ஸ்திரப்படுத்துவதும், வட்டி விகிதங்களைக் குறைப்பதும் நன்மைகளில் ஒன்றாகியுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் சமூக நலன்புரி பயன்களை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். 18 இலட்சம் குடும்பங்களில் இருந்து 24 இலட்சம் குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அது மிகவும் கீழ் மட்டம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு கோரி தோட்ட நிறுவனங்களால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, குறைந்த பட்சத் தொகை கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளோம்.
மாவட்ட அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கினோம். கிராமங்களில் வீதிகள் அல்லது கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் இவை வழங்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள சிறு ஒப்பந்தக்கார்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் பணம் புழங்குவதற்காகத் தான். நியாயமான தொகை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.