ஜனாதிபதி ரணிலின் வருகையை செய்தி சேகரிக்கச் சென்ற - மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க  வருகையை செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (22-06-2024) மட்டக்களப்பு சென்றுள்ள அதிபர் அங்குள்ள பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு பல விடயங்களை ஆராய்ந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு  குண்டு தாக்குதலில் முற்றாக சேதம் ஆக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தை பார்வையிட வந்துள்ள அதிபரிடம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் பல வினாக்களை எழுப்புவதற்காக காத்திருந்த நிலையில் அதிபரின் பாதுகாப்பு பிரிவினால் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஊடக கருத்து சுதந்திரம்

அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்று காணொளி மூலமாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகவும் சூத்திரதாதிகள் தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பல உயிர்கள் கொல்லப்பட்டவுடன் முற்றாக சேதம் அடைந்த சியோன் தேவாலயத்தில் வருகை தந்த அதிபரிடமே ஊடகவியலாளர்கள் வினாக்களை எழுப்ப காத்திருந்துள்ளனர்.

ஆனால் நாட்டின் தலைவராக இருந்து ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் ஜனாதிபதி செயலகம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இது ஊடக கருத்து சுதந்திரம் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை