திருக்கோவிலால் காப்பாற்றப்பட்ட டாக்டர் ஜெயகுலராஜா மறைவு!
(சங்கரன்)
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் திருக்கோவிலுக்கும் முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-06-2024) ஆம் திகதி பிரிந்த வைத்திய கலாநிதி ஜெயகுலராஜாவை பற்றி நினைக்கையில் திருக்கோவிலையும் தவிர்த்துவிட முடியாது. 

திருக்கோவிலைச் சேர்ந்த எட்வேட் வில்லியம் வேலுப்பிள்ளை துரைராஜாவுக்கும் கணுக்கேணி, தண்ணீரூற்றை சேர்ந்த றோஸ் மனோன்மணிக்கும் மகனாக பிறந்தவர்தான் இந்த டானியல் ஜேசன் ஜெயகுலராஜா. இவரது சகோதர, சகோதரிகள் றோஸ் மிருணாளினிதேவி (பாக்கியம்), மேரி பத்மினிதேவி,  பெஞ்சமின் ஜெயனந்தராஜா, சாமுவேல் ஜெயதிலகராஜா, ஜோய்ஸ் ஜெயகுமாரி ஆகியோராவர். 


வைத்தியர் துரைராஜா வில்லியம் ஜெயகுலராஜா
குடும்ப விபரம்

தகப்பன் - எட்வேட் வில்லியம் வேலுப்பிள்ளை துரைராஜா (திருக்கோவில்)

தாய்- றோஸ் மனோன்மணி (கணுக்கேணி, தண்ணியூற்று)

மனைவி - கிறிஸ்டினா ஞானதிலகராணி ஜெயகுலராஜா

மகன் - டானியல் ஜேசன் ஜெயகுலராஜா

சகோதரர்கள் - 
1. ரூத் மிருனாளினிதேவி (பாக்கியம்) - சகோதரி
2. மேரி பத்மினிதேவி 
3. பென்ஜமின் ஜெயானந்தராஜா 
4. சாமுவேல் ஜெயதிலகராஜா 
5. ஜோய்ஸ் ஜெயகுமாரி ஆகியோர் ஆவர்.

தனது மைத்துனி முறையான கிறிஸ்டினா ஞானதிலகராணியை இவர் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியருக்கு டானியல் ஜேசன் என்ற மகன் பிறந்தார். 

(27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர்.

முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். 

போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். 

வெலிக்கடை சிறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின்போது நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதலினால்தான் இவர்களாவது உயிர் தப்ப முடிந்தது. இந்த நடவடிக்கைகளின்போது 54 தமிழ் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர். தமிழினம் எதிர்த் தாக்குதல் நடத்தாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது என்பது அன்று கற்றுக்கொண்ட பாடம். இந்த இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள நடத்திய போராட்டத்தைத்தான் 2009இன் பின்னர் அரசியலுக்குள் புகுந்தோர் வன்முறை என்று முகம் சுழிக்கின்றனர்.

வெலிக்கடை சிறைப் படுகொலை சர்வதேசத்தில் ஏற்படுத்திய தாக்கத்தாலோ என்னவோ எஞ்சியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். மீண்டும் தென்னிலங்கை சிறைக்கு மாற்றப்படலாம் என்ற காரணத்தாலும் தமது எஞ்சிய காலத்தை விடுதலைக்காக மீண்டும் பயன்படுத்தலாம் என்பதாலும் சகல இயக்கத்தவர்களும் தொடர்புபட்டவர்களும் சிறையை உடைத்து தப்பிப்பதென முடிவெடுத்தனர். 

இந்த நடவடிக்கையில் புலிகள் சார்பானோருக்கு சிறைக் காவலர்களை கட்டி வாயில் பிளாஸ்டர் போடும் பணி வழங்கப்பட்டது. பெண்கள் விடுதியில் இருந்த நிர்மலாவை மீட்கும் பொறுப்பு புளொட் இயக்கத்தைச் சேர்ந்த மாணிக்கம்தாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுபோல், டக்ளஸ் போன்றோருக்கும் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது மாணிக்கம்தாசனை தவிர மற்றெல்லோரும் தமக்கு வழங்கப்பட்ட பணியை நிறைவேற்றினர். 

தனிக்குழு ஒன்றை அமைத்து செயல்படப்ட பரமதேவா புலிகள் சார்பானோரை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றார். இவர்களை பொறுப்பேற்க ஒரு குழுவினர் சென்றனர். எனினும் சகோதரர்களான தானும் ஜெயதிலகராஜாவும் ஒன்றாகப் பயணிக்கக்கூடாது என டாக்டர் முடிவெடுத்தார். இடையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இருவருமே பலியாக வேண்டுமே என யோசித்தார். 

தனித்தனியாக பயணிப்பதை போதகரும் ஏற்றுக்கொண்டார். பாதுகாப்பான தங்குமிடங்களில் ஒன்றாக திருக்கோயிலும் இருந்தது. மட்டக்களப்பிலிருந்து திருக்கோயிலுக்கு படகில் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

இன உணர்வாளரான ஒரு முஸ்லிம் சகோதரர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.திருக்கோயிலுக்கு படகு சென்றதை அரசின் உளவாளியான பனிக் கோபால் கண்டு கொண்டார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் எல்லாத் தடயங்களையும் இல்லாமல் அழிப்பதற்கு மிக வேகமாக செயற்பட்டனர். இந்த நிலையிலும் டாக்டருக்கு அறிமுகமான ஆனந்தப் போடியார் என்று அழைக்கப்படும் இராஜதுரை ஆனந்தராஜா பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், டாக்டரை தவிர ஏனையோரை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சந்தோசம் திருமலை வழியாக அவர்களை அழைத்துச் சென்றார். டாக்டரை இன்னொரு போராளி பொறுப்பெடுத்துக் கொண்டார். இந்த நடவடிக்கைகளின்போது தனது வாகனத்தையும் பல்வேறு  உதவிகளையும் வழங்கிய உதவினார் ஆனந்தப் போடியார். பஸ், கார், கால்நடை எனப் பல வழியிலும் பயணம் மேற்கொண்டு மன்னார் பரப்புக்கடந்தானை சேர்ந்தார் டாக்டர்.  பின்னர் கல் ஏற்றும் லொறி, பஸ், வள்ளம் எனத் தொடர்ந்த பயணம் முதலில் யாழ்ப்பாணத்தையும் பின்னர் படகின் மூலம் தமிழகத்திலும் நிறைவடைந்தது. 

தமிழகத்துக்கு பயணமான இவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மருத்துவ பிரிவு, போன்றவற்றின் ஆரம்பப் பணிகளில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். இப்பணிகளில் பாலா அண்ணா, அடேல் அன்ரி ஆகியோரின் ஒத்துழைப்பும் இருந்தது. 

நாடு திரும்பியபின் சென். ஜோன்ஸ் சுண்டுக்குளி பாடசாலைகளின் நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டார். 

தொடர்ந்து முல்லை மாவட்ட வைத்திய அதிகாரியாக (MOH) நியமிக்கப்பட்டார். ஏற்றிருந்த பொறுப்புகள் மூலமாகவும் விடுதலைப் பணிகள் வாயிலாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்த இவரை என்றென்றும் மறக்காது தமிழினம். மட்டக்களப்பு சிறையுடைப்பைத் தொடர்ந்து விடுதலைக்கான பங்களிப்பில் பெரும் பங்காற்றிய ஆனந்தப் போடியாரின் இழப்பை பெரும்துயரமாகவே உணர்கின்றனர் கிழக்கு மாகாண போராளிகளாக விளங்கியோர். விடுதலைப் போராட்டம் மௌனிக்கும் வரை (இந்திய இராணுவ காலம் உட்பட) நிதியாகவும் பொருளாகவும் நிலமாகவும் ஏதோவொரு வகையில் பங்களித்த ஆனந்தப் போடியாரின் நினைவுகள் என்றென்றும் மனதில் இருக்கும்.


அதேவேளை, ஆலயத்தில் கேட்கும் கணீரென்ற குரல், பொது விடயங்களுக்காக வாரி வழங்கும் வள்ளல் தன்மை போன்றவற்றால் என்றும் மறக்க முடியாதவராக இருக்கும் ஆனந்தப் போடியார் குறைந்தபட்சம் இரு தலைமுறைகளில் தனது பெயரைப் பதித்து வைத்துள்ளார். 

அவரின் மறைவு நிகழ்ந்து ஓராண்டு நெருங்கும் வேளையில் டாக்டரின் மறைவு அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
புதியது பழையவை