மட்டக்களப்பில் குறைவடைந்த உயர்தர சித்திவீதம்வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்விப் பணிமனையில் இன்று (03-06-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு கல்வி வலயமானது விஞ்ஞானத் துறை, பொறியியல் தொழில்நுட்பத் துறை, உயிரியல் தொழில்நுட்பத் துறை போன்றவற்றில் அதிகரித்த சதவீதத்தினை காட்டியுள்ளது.

கலைத்துறை பெறுபேறுகள்
அந்த வகையில், உயிரியல் விஞ்ஞானத் துறையில் 2.93 வீத வளர்ச்சியும், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் 12.8 வீத வளர்ச்சியும் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் 7.7 வீத வளர்ச்சியும் கண்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், இம்முறை பௌதீக விஞ்ஞானப் பிரிவில் 7.7 வீத குறைவினையும் கலைப்பிரிவில் 7.4 வீத குறைவினையும் வர்த்தகப் பிரிவில் 01 வீத குறைவினையும் காட்டியுள்ளது.


இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் 2.9வீத வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இதற்கு காரணமாக கலைத்துறைப் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் ஏ.எஸ்.எம்.ஷபான், பொறியில் தொழில்நுட்பப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் அகில  இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றார்.


பல்கலைக்கழக அனுமதி
தொழில்நுட்ப பிரிவு இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் 2015ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் முதலாவதாக மூன்று பாடங்களிலும் ஏ சித்திகள் பெறப்பட்டுள்ளது.


தற்போதைய கணிப்பின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்திருந்து 28 மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் 40 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 24 மாணவர்கள் வர்த்தகத் துறைக்கும் 3 மாணவர்கள் சட்ட பீடத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக கலைத்துறையில் 31மாணவர்களும் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 10 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.


மேலும், பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதத்தில் வீழ்ச்சி கண்டாலும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை