அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார்.
இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் கை முழுவதும் வீங்கி, சற்று நீல நிறமாக மாறியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் வயோதிப பெண் "கொடிய" புருலி அல்சர் (Buruli ulcer) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக அரியவகை "சதை உண்ணும்"நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு கிருமித் தொற்று ஆகும்.
நோயை கட்டுப்படுத்த வைத்தியர்கள் வயோதிப பெண்ணின் இடது கையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
இந்நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஏனெனில் அவர் சுயநினைவுடன் இருந்தால் அவருடைய வலியை "தாங்க முடியாமல்இருக்கும்" என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தோல் மற்றும் மென்மையான திசுக்களை சேதப்படுத்தும் புருலி அல்சர், கொசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பரவுகிறது. இந்த நோய் அவுஸ்திரேலியாவில் பல மாநிலங்களில் முன்னர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.