வீரமுனை கிராம நுழைவாயில் வளைவு விவகாரம் - சம்மாந்துறை நீதிமன்றத்தினால் தடையுத்தரவு நீடிப்பு!



வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும்(27-06-2024)ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.




வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைக்கும் நிகழ்வானது இன முரண்பாட்டை இன வன்முறையினை ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.


இந்நிலையில், மேற்குறித்த வழக்கு கடந்த 19ஆம் திகதி (19) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன் போது மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் முன்னிலையாகியிருந்தார்.



இரு சாராரின் விண்ணப்பங்கள் மற்றும் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு (27-06-2024) ஒத்திவைத்தார்.


மேலும் இனமுரண்பாடுகள், இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவினை பொலிஸார் கோரியிருந்தபோதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஊடகங்களிடம் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
புதியது பழையவை