கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை
இலங்கையில் கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்திய நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பறவைக் காய்ச்சல்
தற்போது, ​​மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவு H5 மற்றும் H7 விகாரங்கள் மற்றும் H9 இன்ப்ளூயன்ஸா போன்றவற்றையும் கண்டறிய தேவையான PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பறவைகள் மத்தியில் பரவும் பறவைக் காய்ச்சல், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கும் என்பதால், பறவைகள் மற்றும் அவற்றின் கழிவுகளை தொடுவதை தவிர்க்கவும், அவதானமாக செயற்படவும் சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


மக்களுக்கு எச்சரிக்கை
பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொடக்கூடாது. கோழிப்பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்கவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

அத்துடன் தமது பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் காணப்பட்டால், அவை உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


புதியது பழையவை