19வது திருத்தச் சட்டம் - நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனை



19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான கால எல்லையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(15-07-2024), உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாததால், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை அங்கீகரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே சர்வஜன வாக்கெடுப்பிற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அது அரசியலமைப்பு மீறும் செயற்பாடு எனத் தீர்ப்பை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மனுவைப் பரிசீலிக்கப் பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடவுள்ளது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை