ஐக்கிய தேசிய கட்சி அரசினால் செய்யப்பட்ட இனப்படுகொலையே கறுப்பு யூலையாகும்..!
கறுப்பு யூலை என்பது இலங்கையில் 1983 யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளைக் குறிக்கும்.இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை .1983 யூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் திருநெல்வீதியில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இதனை பழிவாங்கும் நோக்கில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, சிங்களப் குண்டர்களை ஏவிவிட்டு தமிழருக்கு எதிரான இனப்படுகொலையும், வன்முறைகளும் இடம்பெற்றன.
1983 யூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.
இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.
பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.
இதன்போது வெலிக்கடை சிறையில் இரண்டு வெவ்வேறு நாட்களில் தமிழ் சிறை கைதிகள் படுகொலைலசெய்யப்பட்டனர். இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை 1983,யூலை25,ல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது படுகொலை இரண்டு நாட்களின் பின்னர் 1983, யூலை, 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட மொத்தம் 53, தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர், மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர்.
கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.யூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதமாக கறுப்பு யூலை நினைவு கூரப்படுகிறது.
2024, யூலை 41, வது ஆண்டு நினைவாகும், இந்த படுகொலைகளை செய்த ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதய தலைவர ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகவும் தமிழ் மக்களின் ஆதரவை கோருகிறார்.
இனப்படுகொலை என்பது இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கியதேசியகட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி,ஶ்ரீலங்கா பொதுசன பெரமுன,ஶ்ரீலங்கா பொதுசன முன்னணி ஆகிய ஆட்சியில் இருந்த சகல கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்த வரலாறு உண்டு என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
-பா.அரியநேத்திரன்-