ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று புள்ளி விபரங்களைக் காட்டிப் புலம்புவர்களும் பயமுறுத்துவோர்களும் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும்.கட்சி அரசியல் என்பது ஆகக்கூடிய பட்சம் வாக்குகளைத் திரட்டுவதுதான்.அதிலும் குறிப்பாக தேசியவாத கட்சி அரசியல் என்றால்,மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது.அதைச் செய்யாத அல்லது செய்ய முடியாத அரசியல்வாதிகள் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று பயமுறுத்தப் பார்க்கிறார்கள்.அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல கட்சி அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள்.தமிழ்மக்களை வாக்காளர்களாகச் சிதறடித்ததில் அவர்களுக்கும் பொறுப்புண்டு.
எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தமிழ்மக்ககளை ஒன்றாக்குவது.தமிழ்ப் பலத்தை ஒன்று திரட்டுவது.தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவித்து ஆகக்கூடியபட்சம் ஆக்க சக்தியாக மாற்றுவது.
இந்த அடிப்படையில்தான் கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.எழு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும்,மக்கள் அமைப்பாகிய“தமிழ்மக்கள் பொதுச்சபை”க்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை அது.அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு.முதலாவது முக்கியத்துவம்,கட்சிகளும் மக்கள் அமைப்பொன்றும் அவ்வாறு ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொள்வது நவீன தமிழ் வரலாற்றில் அதுதான் முதல் தடவை
தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிர்ணயகரமான தருணங்களில் கொள்கைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கொலனித்துவ ஆட்சிக்காலத்தில்,இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில்,1931ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள்.அப்பொழுது இருந்த யாழ்ப்பாண வாலிபக் காங்கிரஸ் மகாத்மா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.அங்கிருந்து தொடங்கி தமிழ்மக்கள் நிர்ணயகரமான தேர்தல்களில் நிர்ணயகரமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள்.
மிகப்பலமான உயர்குழாத்தைச் சேர்ந்த சேர்.பொன் ராமநாதன்,பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு ஆகிய மகாதேவாவை ஜி.ஜி.பொன்னம்பலம் 1947ஆம் ஆண்டு”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”என்று கூறித்தோற்கடித்தார்.அதே பொன்னம்பலத்தை பின்னர் கொள்கையின் பெயரால் செல்வநாயகம் தோற்கடித்தார்.பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும் தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள்.அதன்பின் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தீவில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில்,தமிழ்மக்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோசுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேச்சை குழு 13ஆசனங்களை வென்றது அதுதான் முதல்தடவை.அந்த வெற்றி தமிழ்மக்களின் போராட்டத்தின் விளைவு.தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள்.
அதன் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு உருவாக்கப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில்,தமிழ்மக்கள் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள். அதாவது போராட்டத்தின் விளைவாக தோன்றிய கூட்டமைப்புக்கு கொள்கை அடிப்படையில் வாக்களித்தார்கள்.22ஆசனங்களை அள்ளிக்கொடுத்தார்கள். ஏன் அதிகம் போவான்?கடந்த 15 ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் எப்படி வாக்களித்தார்கள்?தங்களைத் தோற்கடித்த குடும்பத்துக்கு எதிராக பெருமளவுக்கு ஒன்றுபட்டு வாக்களித்தார்கள்.
எனவே தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகத் திரண்டு ஒன்றுபட்டு வாக்களித்த பல தருணங்கள் உண்டு.ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த தருணங்கள் பல உண்டு.ஆனால்,கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்களில் வாக்காளர்களாக சிதறடிக்கக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை.அதனால் அவர்களை மீண்டும் ஒரு பெரிய மக்கள் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.
சிலர் பெரும்பான்பை வேடரபாளரகளுடன் பேரம் பேசப்போவதாக குழந்தை அரசியல் பேசுகிறார்கள்? யாரோடு பேரம் பேசுவது?என்ன பேரம் பேசுவது? இதற்குமுன் எட்டு ஜனாதிபதிகளுடன் பேரம்பேசி எதை பெற்றோம்.!
வேண்டு மெனில் பணத்தை மட்டும்(பெட்டி டீல்) பேரம் பேசலாம் வேறு எந்த பேரம் பேச்சும் சரிவராது.