புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவையை முடித்து நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று (21-07-2024) நடைபெற்ற "குடியேற்றம்" நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
நலன்புரி உதவித் திட்டம்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட "விகமனிக ஹரசர" நிகழ்ச்சித்திட்டம் வடமேற்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், குருணாகல், புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் முன்மொழியப்பட்ட சுயதொழிலை ஆரம்பிக்க தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.