இன்று சுவிட்சலாந்தில் ஆரம்பமான 25வது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதி மைதானத்தை விட்டு காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில், இன்று சுவிசில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழாவின் போதும் இதே சர்ச்சையை அடிப்படையாக வைத்து களோபரம் ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை தன்னை மீண்டும் எடுக்கும்படி தலைவர் பிரபாகரன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறி, அந்தப் பொறுப்பை சில நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ரகுபதி என்பருக்கும், முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியைத் தொடர்ந்தே, சுவிஸ் காவல்துறையினர் ரகுபதியை மைதானத்தைவிட்டு அகற்றியதாகவும், பிரச்சனையில் ஈடுபட்ட சில முன்னாள் போராளிகளையும் மைதானத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை, ரகுபதி மைதானத்தை விட்டுவெளியேறாதுவிட்டால், தாம் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளமாட்டோம் என்று சில விளையாட்டு வீரர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் மைதானத்தில் இருந்த எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.