தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு, பொதுச் சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு!
தமிழ்ப் பொது வேட்பாளராக திரு பா. அரியேந்திரன் அவர்கள் பெயர் முன்மொழியப்பட்டதை அவரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து தங்களின் சிலரின் பிரதிபலிப்பபை பொதுவாக அனைவரும் எதிர் பார்த்ததுதான். இதற்காக கட்சி ரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சில விடயங்களைக் குறிப்பிடுவீர்கள் என்பதும் எதிர்பார்க்கப்பட்டது தான்.
இதற்கு முன்னதாக தாங்கள் எடுத்திருக்க வேண்டிய, தற்போதாவது முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படவேண்டிய விடயங்களைக் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
1. திரு. சம்பந்தன் ஐயா முதுமை காரணமாக செயல்படாமல் இருக்கின்றார். எனவே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எந்தக் குழுவிலாவது ஏகமனதாகவோ வாக்கெடுப்பிலோ தீர்மானம் எடுக்கப்பட்டதா? இல்லாவிட்டால் அவ்வாறான முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்தவரை முதலில் கட்சியிலிருந்தே நீக்குங்கள்.
தமிழரசுக் கட்சியினைப் பொறுத்தவரை முதுமையில் தந்தை செல்வா கதிரையில் இருப்பார். அவர் கூறும் வார்த்தைகளைக் குனிந்து நின்று கேட்டு அதனை திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கேட்டு உரத்த குரலில் கூறுவார். இது அன்றைய நிலைமை .
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைப் பணிமனையில் இருந்து பிரதான வீதி ஊடாக பயணித்த சட்டமறுப்பு ஊர்வலத்தின் போதும் இவ்வாறு தான் நடந்தது. பொலிசார் இந்த ஊர்வலத்தைத் தடை செய்கிறோம் ஒன்று கூறி வீதித் தடைகளைப் போட்ட போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை அப்படியே வீதியில் உட்கார்ந்திருக்கும்படி தந்தை செல்வா அன்புரிமையுடன் வேண்டிக் கொண்டார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அனைவரும் உட்கார்ந்திருந்தனர்.
பொலிஸாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனெனில் இதற்கு முன்னதாக இலங்கையில் போக்குவரத்து மிகவும் நெரிசல் கூடிய காலி வீதியைத் தடைசெய்து ஐ. தே. க தலைவர் ஆர் ஜெயவர்த்தன சட்ட மறுப்பு ஊர்வலம் நடத்திய போது பொலிஸாரினாலோ, இராணுவத்தினாலோ எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வாறு இருக்கையில் தமிழர்கள் சடட மறுப்பாக வீதியில் உட்க்காந்திருக்கையில் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் நின்றனர். தடைகளை உடைக்க முயன்றனர் வன்முறையில் ஈடுபட்டனர் என்று சுட்டிக் காட்டக்கூடிய முறையில் எதுவும் நடக்கவில்லை. அவ்வாறாக தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தொண்டர்களும் ஆதரவாளர்களும் நடந்து கொண்டனர். இறுதியில் மாலையில் நெருங்கும் வேளையில் "நாங்கள் இத்தனை மணி நேரமாக சட்டமறுப்பு ஊர்வலத்தை நடத்தி இருக்கிறோம்" என்று தந்தை செல்வா அறிவித்தார்.
இவ்வாறான தமிழரசின் வரலாறுகள் எதுவும் தெரியாமல் தன்னிச்சையாக நடக்கும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த பின்னரே ஏனையமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சரி. என்னதான் முதுமை என்றாலும் சம்பந்தன் ஐயா சக்கர நாற்காலியில் பாராளுமன்றம் சென்றார் என்றாலும் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தில் தடுக்கி விழவில்லை. அவரது மறைவுக்கு பின் எம்.பி யான குகதாசன் அவர்கள் முதல் நாளே வயோதிபம் காரணமாக பாராளுமன்றில் அன்றே தடக்கிவிழுந்து விட்டாரே.
கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் வாக்குறுதியளிக்க வேண்டியது ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோ தான். ஆனால் திருமண நிகழ்வென்றால் நானே மாப்பிள்ளை, மரண வீடென்றால் நானே பிணம் என்றவாறாக சுமந்திரன் வாக்குறுதியளித்தார். முடிவில் இதனை தான் சாத்தியமாக்கப்போவதில்லை என ரணில் தனக்கு வாக்குறுதியளித்ததாக ஹரிஸ் எம்.பி கூறினார். அதுதான் நடந்தது.
இதன் விளைவாக தமிழரசுக்கட்சி தம்மை ஏமாற்றி விட்டதாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் முடிவெடுத்ததால் கடந்த தேர்தலில் கட்சி தோல்வியடைந்தது. இப்போது கூட பிரதான வேட்பாளர்கள் எவரும் இந்த விடயத்தை சாத்தியமாக்கித் தருவதாக பகிரங்கமாக கூறத்தயாரில்லை. இந்த விடயத்தில் அம்பாறை மாவட்டத்தமிழரை ஏமாற்றிய சுமந்திரனுக்கு மற்றவர்களை நோக்கி விரல் நீட்ட என்ன தகுதி உள்ளது?
2. தமிழர் தரப்பில் இருந்து இறுதிப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது ‘சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்ளூர் பொறிமுறையே போதும்’ என்று அறிவித்தார் சுமந்திரன்.
இப்படி அறிவிக்க சுமந்திரனுக்கு கட்சியின் எந்த குழு அனுமதி அளித்தது? இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அவர். ஆதாரங்களை திரட்ட வேண்டிய பொறுப்பு யாருடையது? தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி இது என்று கருதி இருந்தால் இவ்வாறான முடிவை அவர் அறிவித்திருக்க முடியுமா?
கரைச்சி பிரதேச சபைக்கு வேட்பு மனு தாக்கல் செய்த குழுவினர் தங்களது வழிகாட்டி சுமந்திரனே என வாய்மொழியாக பரப்புரைசெய்தனர். சந்திரகுமாரின் கட்சியினரும் இவர்களும் இணைந்து ஆட்சி அமைப்பதே இலக்காக இருந்தது. இதெல்லாம் கட்சிவிரோத நடவடிக்கை இல்லையா? சந்திரகுமாரின் கட்சிக்கும் இவருக்கும் இருந்த கள்ள உறவு அண்மையில் தந்தை செல்வா மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்வில் அம்பலமாகிற்று.
இறுதி யுத்தத்திற்கு முன்பிருந்தே தமிழரசு கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தவர் அறிய நேந்திரன் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இறுதி யுத்தம் முடியும் வரை தமிழ் தேசிய அரசியலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்களின் சொற்களுக்கு ஆட போகின்றீர்களா?
யாழ் மேயர் தெரிவு தொடர்பான விடயங்களில் இவரது கோளாறுகள் பற்றி எழுதுவதென்றால் தனி கட்டுரை என்பதைவிட ஒரு புத்தகமே வெளிவரலாம். உச்சமாக தலைவரும் செயலாளரும் அவ்வாறு முடிவு எடுக்கவில்லையே என ஊடகவியலாளர் கேட்டபோது ‘அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் திரு ஆனோல்ட் தான் மேயர்’ என திமிர் தனமாக அறிவித்தவர் இவர். காட்சிக்குள் இவர் புகுந்த பின்னர் கட்சியின் துணைத் தலைவர் சீ. கா சிற்றம்பலம் உட்பட வெளியேற்றப்பட்ட கட்சியின் விசுவாசிகளை ஒருமுறை பட்டியலிட்டு பாருங்கள். இதற்குப் பின்னர் ஏனைய விடயங்களை பற்றி முடிவு எடுக்கலாம்.
- தயாளன்