இன்றுள்ள மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் மாணவர்கள் மாபெரும் இனப் படுகொலைகளை சந்தித்தார்கள். கனவு பிசுபிசுக்கும் அவர்களின் குருதி இந்த மண்ணில் கறையாகப் படிந்திருக்கிறது.
இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மாணவர்கள் அணிதிரள்வதற்கு இந்தப் படுகொலைகள்தான் தூண்டுகோலாக இருந்தன.
இனப்படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ்கின்ற பொறுப்பு இருக்கிறது.
பாடசாலைகள் மீதும் பள்ளி மாணவர்கள்மீதும் போரை தொடுக்கிற, குண்டுகளை கொட்டுகிற இனக்கொலை அரசின் இருண்ட பக்கங்களில் எங்கள் பெண் குழந்தைகளின் குருதியால் எழுதப்பட்டது செஞ்சோலை வடு.
ஒரு தலைமுறை மீதான இனக்கொலையல்லவா இது? ஒரே நாளில், ஒரு சில நிமிடங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல 53 மாணவிகளை சிங்களப் பேரினவாத்தின் இனக்கொலைப் பசிக்கு வாறிக் கொடுத்த அந்த துயரத்தை மறக்க முடியாமல் நெஞ்சம் இன்றும் துடிக்கிறது.
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடு. 2006ஆம் ஆண்டு. ஓகஸ்ட் 14ஆம் திகதி. வழக்கமான ஒரு பொழுதாக புலர்ந்தது. நெஞ்சில் கனவுகளை சுமந்த பள்ளி மாணவிகள் முதலுதவிப் பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குழந்தைகள் கொன்று வீசப்பட்டனர். அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன.
2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம்.
ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன.
எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.
தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…
தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…
மனித விரோதச் செயல்
இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கிண்ணஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது.
இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்சே அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது.
நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிநை்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.
இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன்.
பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள்.
சிங்கள அரசின் வேலை
53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது. கல்வி உரிமைக்காகப் போராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம்.
ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை.
அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா? இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இந்தப் படுகொலைக்கான நீதிக்காக ஏங்குகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு குறித்ததும் ஆகும். இவைகளுக்கான நீதி முன்வைக்கப்படுகிற நாளில்த்தான் இப் படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். நினைவு கூர்தல் என்ற போராட்டத்தின் வழியாக செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு நீதியை அஞ்சலியாக்குவோம்.