2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கு 25 கோடி ரூபா வரி வருமான இழப்பினை ஏற்படுத்திய நாற்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 வாகனங்களை சுங்கத்திற்கு எடுத்துச்செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப்பிரிவு சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் வாகனங்கள் மீட்பு
நீதிமன்ற உத்தரவின் பேரில் இதற்கு முன்னரும் பல கடத்தல் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை அடையாளம் கண்டு வாகனங்களை பறிமுதல் செய்த பின்னர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மூன்று ஆங்கில எழுத்துகளுடன் கூடிய பதிவு எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என்ற போதிலும், இணையத்தில் தரவுகள் நீக்கப்பட்டு இந்த சொகுசு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
சொகுசு வாகனங்கள் பறிமுதல்
பதுளை, வாரியபொல, பலாங்கொடை, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் ஏழு பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட GX 68 89, GH 5544, HA 2426, G Y 4675, G S 9630, GU 9748 ஆகிய சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2024 ஆம் ஆண்டு வரை அதிகளவான வாகனங்கள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.