தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!



ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் அளவு 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தற்போது வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தில் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றது.

அரச அலுவலகங்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதேநேரம் வாக்காளர் அட்டைகளின் அச்சிடல் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் அடுத்த மாதம், முதலாம் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக மொத்தம் 736,589 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  இவர்களில் 7 இலட்சத்து 12 ஆயிரத்து 321 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் ” இவ்வாறு ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை