மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு மத்தியிலே கோயில் கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்று மட்டக்களப்பு தமிழகத்தில் தேரோடும் பெரும் பதிகளில் ஒன்றாக விளங்கும் கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 2024 ம் ஆண்டுக்கான மஹோற்சவ பெருவிழாவின் தேரோட்ட திருவிழாவானது பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ இன்று காலை இடம்பெற்றது.
சிவாச்சாரியார்கள் மந்திர உச்சாடனத்துடன் பூ மழை பொழிய பக்தர்களின் அரோகரா கோசம் விண் அதிர்ந்து நிற்க வெவ்வினைகளை வேரகற்று விநாயகா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரேறி வலம் வந்து அடியார்களுக்கு அருள் வழங்கிய கட்டுப்பிள்ளையார்.
வயலும் வயல்சார்ந்த இயற்கை எழில்மிகு வனப்புமிக்க இடம்தனில் வந்தமர்ந்து நிகரில்லா அருளாட்சி புரியும் விக்கினங்கள் தீர்க்கும் வேளமுகத்தான் சித்திரத்தேர் ஏறி சிங்காரமாய் வலம்வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்ததோடு அவனது அருளாட்சியையும் வெளிப்படுத்தி நிற்கிறது.