மட்டக்களப்பில் சிறுவனை கடத்த முயன்றவர் நையப்புடைப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில் பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (17-08-2024) அதிகாலை இடம்பெற்றது.

வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தாய், தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 3.30 மணியளவில் சிறுவன் பால் கேட்க, தாயார் சமையலறைக்குச் சென்றுள்ளார்.

குழந்தையுடன் காட்டுக்குள் ஓடிய நபர்
தாயார் பால் போத்துலுடன் திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணாத நிலையில், பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு சிறுவனை தேடியுள்ளனர். 

இதன்போது சிறுவனை கடத்திக்கொண்டு நபரொருவர் காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடியுள்ளனர்.

சிறுவனை காட்டில் விட்டுவிட்டு சந்தேக நபர் அந்த பகுதியில் ஒளிந்திருந்தபோது, அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நைய்யப்பௌடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதுடன், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிப் பட்டியலில் (ஜ.ஆர்.சி) சேர்க்கப்பட்டவர் எனவும் போதைப்பொருள் வாங்க பணத்துக்காக சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்தமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேகழ்நபர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
புதியது பழையவை