நாட்டில் வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை



உள்ளூர் சீனி உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக நாட்டுக்குள் வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனி உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே இலாபத்தில் இயங்கி வந்த 4 உள்ளூர் சீனி உற்பத்தி தொழிற்சாலைகளில் தற்போது கடும் நிதி நெருக்கடியால் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சீனி உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு

வற்வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளிலிருந்து அரசாங்கம் விலக்களித்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மாத்திரம் அந்த வரிகளை விதித்ததே இதற்கு முக்கிய காரணமெனவும், சீனி உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலைமை காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி ஒரு கிலோவின் விலை 325 ரூபா முதல் 350 ரூபாவரையிலும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி ஒரு கிலோவின் விலை 225 ரூபா முதல் 250 ரூபாவரையிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 100 வீதம் அரசாங்கத்துக்கு சொந்தமான செவனகல மற்றும் பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலைகளின் கீழ் சுமார் 1,500 தொழிலாளர்களும், 35,000 கரும்பு விவசாயக் குடும்பங்களும் உள்ளதாகவும் 51 தனியார் துறையினரால் நடத்தப்படும் நான்கு உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலைகள் கல்ஓயா மற்றும் எதிமலே ஆகியவற்றின் கீழுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையால் நிறுவன ஊழியர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் சம்பளம் வழங்க முடியாமல் தங்களது நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தீர்வாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு உடனடியாக VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரியை விதித்து வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் உள்ளூர் சீனி தொழிற்சாலை நிர்வாகம் கோரியுள்ளது.

தற்போது ​​இலங்கையில் மாதாந்த நுகர்வு சுமார் 30,000 மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது. அதேவேளை உள்ளூர் சிவப்பு சீனி உற்பத்தி வருடத்துக்கு சுமார் 120,000 மெற்றிக்தொன்னாகும். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அளவு 256,000 மெற்றிக்தொன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை