வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பெண்கள் உயிரிழப்பு!



மோட்டார் சைக்கிள் மீது கயஸ் வேன் மோதி நேற்று (04-09-2024) இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தையொன்று காயமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்ததுடன் அவர்களுடன் இருந்த குழந்தை காயமடைந்துள்ளது.

இவர்கள் மாலுலாவ கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், வேன் வீதியை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அனுராதபுரம் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது. எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை