கல்முனையில் விசேட அதிரடிப்படையினரால் வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் - 2பேர் கைது!



சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று(03-10-2024)வியாழக்கிழமை அதிகாலை இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற அணியினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.


இதன் போது குறித்த முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி ஆட்டோ பசார் சந்தி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய சந்தேக நபர் உட்பட மருதமுனை ஹாஜியார் வீதி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய சந்தேக நபரையும் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை   அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை  மாவட்ட    உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான  சம்பத் குமாரஇஅசித ரணசூரிய  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான  அதிகாரிகள்   இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர  கைதான இரு சந்தேக நபர்களும்  முச்சக்கரவண்டி ஊடாக பயணப்  பொதிகளில்   20200 சிகரெட்டுகளை  எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன்  பெறுமதி  பல இல்சம் ரூபா என  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர்.
புதியது பழையவை