அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்தது என்ன?
உயிரிழந்த தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துள்ளார்.
இதன்போது, அவரது இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த எட்டு வயது குழந்தை, தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த தாயார் உடனடியாக தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாயாரின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.