ஐயா, வைத்தியரே நாடாளுமன்றமென்பது அச்சுவேலி சந்தை கிடையாது!



நாடாளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்ட புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கம் முன்வரிசையில் முதல் ஆசனம் ஜனாதிபதிக்கும், இரண்டாவது ஆசனம் பிரதமருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். அதேபோல எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் முதல் ஆசனம் எதிர்க்கட்சி தலைவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும். 

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய ஆசனம் ஒதுக்கப்படும். 

இன்றைய சபை நடவடிக்கை முதல் நாள் சபை அமர்வென்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, சபையில் தேவையான இடத்தில் எம்.பிக்கள் அமர்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களில் ஏனைய உறுப்பினர்கள் அமர்வதில்லை. இது நடைமுறையாக பின்பற்றப்பட்டுவருகின்றது.

மேற்படி மூவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத நாட்களில்கூட அக்கதிரைகளில் ஏனைய உறுப்பினர்கள் அமர்வதில்லை.
ஜனாதிபதி அடிக்கடி சபைக்கு வருவதில்லை, சில அமைச்சு பதவிகளை வகிப்பதால் தேவையேற்படும்போது சபைக்கு வரலாம். அவர் எப்போதாவதுதானே வருகிறார், அவரின் கதிரையில் அமரலாம் என கருதக்கூடாது. அது ஜனாதிபதி என்ற பதவி நிலைக்கு உரியது. அந்த கதிரைக்குரிய மதிப்பு, மாண்பு காக்கப்பட வேண்டும்.

சரி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமரலாம் எனக் கூறப்பட்டுள்ளதே என அவர் கூறுகிறார்....அப்படியானால் சபாநாயகருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம் அல்லவா? அப்படியும் அல்லாவிட்டால் நாடாளுமன்ற செயலாளருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம் அல்லவா?

பணியாளர் ஒருவர் தவறை சுட்டிக்காட்டும்போது, அதனை ஏற்று செயற்பட்டிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் விதாண்டவாதாம் பேசி, விளம்பரம் தேட முற்படுவது ஏற்புடையது அல்ல.

9 ஆவது நாடாளுமன்றம்தான் நாறடிக்கப்பட்டது. நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், மரபுகள் அப்பட்டமாக மீறப்பட்டன. அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்றத 10 ஆவது நாடாளுமன்றத்திலாவது, அச்சபைக்குரிய கௌரவம் உரிய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். 

நாடாளுமன்ற உறுப்பினருக்கென சிறப்புரிமைகள் உள்ளன. அதற்காக அவர் சபைக்குள் ஏதேச்சையாக செயற்பட முடியாது. நாடாளுமன்ற விழுமியங்கள் மற்றும் நிலையியற் கட்டளைக்கு முரணாக எவரேனும் உறுப்பினர் செயற்பட்டால் அவரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கும், சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிப்பதற்கும் சபாநாயகருக்கு முழு அதிகாரமும் உள்ளது.  

ஆர்.சனத்
புதியது பழையவை