மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை.
மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது.
எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம்.
எனவே புதிய அரசியலைப்பு ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ தேர்தலோ நாட்டில் இருக்காது என்றார்.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப்பிரதமர் என்ன சொல்லப்போகிறார், அனுரா என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.