உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக அறியமுடிகின்றது.
இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச்செய்து புதிய வேட்பு மனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் முதல் பாதியில் நடத்தவும் 07 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரைச் சந்தித்தபோது மாகாண சபைத் தேர்தல் குறித்தான இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததுடன் அது நடத்தப்படும் காலப்பகுதியையும் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்பு வரும்வரை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும்வரை மாகாண சபை முறைமை மாறாதென்றும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.