திருடப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது!




திருடிய மாட்டினை இறைச்சியாக வெட்டும் போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மாட்டினை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் மாட்டிறைச்சியுடன் இன்று (21-01-2025) செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாதத்திற்கு உட்பட்ட கன்று இரவு வேளையாகியும் வீடுவரவில்லை என பொலிஸ் நிலையத்தில் மாட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து சம்மாந்துறை பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோது கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை செய்தனர்.

அப்போது அறை ஒன்றினுள் அறுத்து மாட்டிறைச்சியுடன் மாட்டினை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் மீட்டு 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 47 கிலோ 600 கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் மற்றும் மாட்டினை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை