'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற ஆன்றோர் வாக்கிற்கேற்ப பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தைத்திருநாள் இன்று மலர்ந்தது.
தமிழ் நாட்காட்டியின் முதல் நாளான இன்று (14-01-2025)நாட்டின் பல பகுதிகளிலும் கோவில்களில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்களும் ஆரவாரத்துடன் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' எனும் தெய்வப்புலவரின் வாக்கிற்கிணங்க, கண்கண்ட கடவுளான சூரியனுக்கும்
தனது இரத்தத்தினை வியர்வையாக நிலத்தில் சிந்திப் போராடி படியளக்கும் உழவர்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கு நிகரான ஆநிரைகளுக்கும் நன்றி செலுத்தும் உன்னதத் திருநாளாக தைப்பொங்கல் மிளிர்கின்றது.
'உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' எனும் சுப்பிரமணிய பாரதியின் கவி வரிகள் உழவு புனிதமானது, உழவர்கள் என்றென்றும் வணக்கத்திற்குரியவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கின்றது.
தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாக இது அமைகின்றது.
உத்தராயணத்தில் சூரியன் வடக்கு நோக்கி நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது.
இதன் முதல் நாள், ‘மகர சங்கராந்தி’ என்றும், ‘தைப்பொங்கல்’ என்றும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள் ....
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்றான் வள்ளுவன் - பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது என்பதே இதன் பொருள்.
உழைக்கும் மக்கள், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ள பொங்கல் பண்டிகை இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.
உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.
உலகுக்கே வெளிச்சம் தரும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிவிட்ட போதிலும் பொங்கல் திருநாளில் மட்டும் தொன்றுதொட்டு சூரியனை போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
அதுமட்டுமின்றி, உழவர்களின் உன்னத தோழனாக இருந்து உழவுக்கு உறுதுணை புரியும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகின்றனர் உழவர்கள்.
தை மாதம் தொடங்கி இரண்டாவது நாளில் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.
தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி செலுத்திய பின்னர் இந்த நாளில் கால்நடைகளை கௌவரப்படுத்துகின்றனர்.
வருடம் முழுவதும் வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிகளோடு சேர்ந்து உழைக்கும் எருதுகளுக்கு இதன்போது நன்றி செலுத்தப்படுகின்றது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.
அன்றைய நாளில் பட்டியிலுள்ள கால்நடைகளை நீராட்டி அவற்றுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து பொங்கல் பொங்கி உண்ணக்கொடுப்பது வழமை.
அதற்கமைய, உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.