(பாசி)
ஊரின் பெயரை தன்னகத்தே கொண்ட சேனாதிராஜா 1971 காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்களுக்கான தரப்படுத்தல் கல்விக்கொள்கையோடு ஒத்துவராத தமிழ் மாணவர்கள் தங்கள் கல்வியும், வாழும் உரிமைகளையும் உறுதிப்படுத்த புறப்பட்டபோது ஒரு மக்கள் எழுச்சி தமிழர்கள் மத்தியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது.
அந்த அலைகளுக்கு பின்னால் மாற்றம் அடைந்த தமிழர் போராட்டங்களில் சேனாதிராஜா அவர்களின் பங்கும் அடையாளப்படுத்தப் படக்கூடியதாக அமைந்தது.
1972 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பின்னால் தமிழர் போராட்டம் பல்வேறு கட்டங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி ,இலங்கைத் தொழிலாளர் கட்சி ஒன்று சேர்ந்து தமிழர் கூட்டணியாக மாற்றம் அடைந்தது. தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் அதில் இளைஞர்கள் பிரிந்து தமிழ் இளைஞர் பேரவையாகவும் மாற்றம் பெற்றது.
தமிழ் இளைஞர் பேரவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் எல்லாம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது தமிழர் பகுதிகளுக்கு வரும் மந்திரிமார்களுக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதும், கடையடைப்புக்கள், பஸ்கரிப்புக்கள் என்றும் தீர்மானங்களுக்கு அமைவாக சேனாதிராஜாவும் இணைந்து செயற்பட்டார்.
யாழ் மாவட்டத்தில் இளைஞர் செயற்பட்டாளராக இருந்த புஷ்பராஜா,வரதராஜபெருமாள் முத்துக்குமார். அம்பிகைபாகன். சூரியகுமார். சந்திரகுமார், புஷ்பராணி,அங்கயற்கண்ணி ,Dr.தேவநாயகி போன்ற பல இளைஞர்களோடும்
திருமலையில் தங்க மகேந்திரன் ,மட்டக்களப்பில் பன்னீர்ச்செல்வம், நடேஸ்சானந்தம் ,குணாளன் ,துரைராஜசிங்கம் ,மண்டூர் மகேந்திரன் ,செல்வேந்திரன் ஆகியோருடனும் திரு.சேனாதிராஜா அவர்கள் இணைந்து செயற்பட்டார்.
ஒரு தீவிரமான அகிம்சைப் போராளியான சேனாதிராஜா அவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் இளைஞர் பேரவையின் வளர்ச்சிக்காக வட கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டார் .
இந்த செயற்பாட்டின் காரணமாக 42 இளைஞர்களுடன் சேர்ந்து கறுப்பு கொடி காட்டினார்கள் என்று சேனாதிராஜாவும் கைது செய்யப்பட்டார்.
தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஸ்ரீலங்கா அரசு இந்த இளைஞர்களை வெலிக்கடைச் சிறையில் அடைத்தது. பின்னர் இப்படியான ஒரு செயலினால்தான் பல இளைஞர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்படவும் காரணமாக அமைந்தது. எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் பல வருடங்களுக்கு பின் இந்த இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இவர்களில் காசிஆனந்தன்,வண்ணை ஆனந்தன்,சேனாதிராஜா நடேசானந்தம் போன்றவர்கள் முன்னிலையில் இருந்தார்கள். இவர்களின் விடுதலைக்கு பின் தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களுக்குச் சென்றிருந்தது. இந்தக் காலப்பகுதியில் சேனாதிராஜா அவர்களின் வீட்டுக்கு நானும், அவரும் , பேபி அண்ணாவும் அடிக்கடி போய் வருவோம். வெறும் சாரம் கட்டிய பெடியன்களாக மிதி வண்டியில் எங்கள் பயணம் இருக்கும். சேனாதி அண்ணனின் அம்மாவும் ,தங்கையும் எங்களை அன்போடு உபசரிப்பார்கள்
பகல் வேளைகளில் சேனாதி அண்ணனின் வெற்றிலைத் தோட்டத்தில் நாங்கள் பொழுது போக்கை கழிப்போம் . எங்களுடைய கலந்துரையாடல் களில் சேனாதி அண்ணன் அதிகம் ஈடுபாடு இருக்க மாட்டார். அவரின் நோக்கம் எல்லாம் தமிழ் அரசியல் சாந்ததாகவே இருக்கும்.
மாவை அண்ணனின் வீட்டுக்கு பேபி அண்ணன், உமாமகேஸ்வரன் ,ஐயர், குலம் போன்றவர்களும் வந்து போவார்கள். காங்கேசன் துறை புகையிரத நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு போகும் போது இங்குதான் மிதிவண்டியைகளை விட்டுச் செல்வார்கள் .
விடுதலையாகி வந்த இளைஞர்களுக்கு அன்று தமிழ் மக்கள் மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.தமிழர்களின் பொதுவாக தமிழ் இளைஞர்களின் விடுதலை வீரர்களாக இவர்கள் காட்சி அளித்தார்கள்.காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ,சேனாதிராஜா ,போன்றவர்கள் வரும் கூட்டங்களுக்கு இளைஞர்கள் வந்தார்கள். இவர்கள் மேடைகளில் பேசும் போது அவர்களுக்கு இரத்த திலகம் ஈடுவதற்கு இளைஞர்கள் முண்டியடித்தார்கள்.
யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. அமிர்தலிங்கம் உட்பட தந்தை செல்வாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள் தந்தை செல்வாவுக்கு பக்கத்தில் இருந்த காசி ஆனந்தனிடம் தந்தை ஒரு மந்திரம் சொன்னார். அவர்களுக்கு பின்னால் இருந்த நான் அதை விளங்கிக் கொண்டேன்.
"காசி ஆனந்தன் இந்தக் கூட்டத்தை கண்டு மயங்கி விடக்கூடாது. என்ற அந்த மந்திரம் பல உண்மைகளை இன்று வரை உணர்த்திக்கொண்டே இருக்கிறது"
மாவை அண்ணன் முழுநேர அரசியல் வாதி ஆகியவுடன் அவர்கள் தொடர்புகள் விரிவடைய தொடங்கிவிட்டன எதாவது ஒரு சில சந்தப்பங்களில் கண்டு கதைப்பதோடு தொடர்புகள் அற்றுப்போனது.
1986 ஆண்டு சென்னையில் இந்திரா நகரில் அன்ரன் பாலசிங்கம் இருந்த வீட்டில் சில கோரிக்கைகளை முன்வைத்து தலைவர் உண்ணா விரதம் இருந்தபோது அவரைச் சந்திக்க சேனாதி அண்ணர் வந்து சென்றார்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு 2002 ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவான நேரத்தில் தான் தலைவருக்கும் சேனாதி அண்ணருக்குமான சந்திப்பு மீண்டும் நடந்தது.இரணைமடு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த சேனாதி அண்ணரை நானும் அச்சூதனும் சந்தித்தோம். சேனாதி அண்ணருடன் அரியநேத்திரனும் இருந்தார்.
இந்தக் காலத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி தமிழ்ச்செல்வன் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது .
ஒரு சிறு வயது தமிழ்ப் பற்றாளனாக தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் உச்சம் தொட்டு ஏழு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர் இருந்த சேனாதி அண்ணனை இறுதிக் காலங்களில் வரலாறு தெரியாதோர் விமர்சிக்க முற்பட்டமை வேதனையானது.
கடைசியாக நான் அவரை வவுனியாவில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கண்டேன். அவர் கூட்டத்துக்கு நேரம் பிந்தித்தான் வந்தார். கூட்ட மண்டபத்துக்குள் அவர் நுழைந்த போது ஒரு சலசலப்பு ஏற்பட்டது எட்டிப் பார்த்தேன் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். தலைவர் ஆசனத்தில் அவரை அமரக்கூடாது என்று . ஒருவர் ஆக்ரோஷமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
அவர் யாரென அவதானித்தேன் மாவையண்ணனிடம் பல தடவைகள் சென்று பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபடுவதற்காக அனுமதி கேட்டு பாராளுமன்றம் சென்ற ஒரு இளம் உறுப்பினர்.
தமிழ்த் தேசியத்துக்காக சுமார் 40ஆயிரம் பேர் கல்லறைக்கு சென்ற மண்ணில் இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடக்கி பின் பிறந்தவரே இவர்.