மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்தம் இடம் பெறும் புதிர் வழங்கும் நிகழ்வு இன்று(14-02-2025) ஆம் திகதி ஆலயத்தில் இடம்பெற்றது.
ஆலயத்திற்கு சொந்தமான நெற்காணியில் விளையும் நெல் மற்றும் படுவான் பிரதேச வேளாண்மை செய்கையாளர்களால் ஆலயத்திற்கு வழங்கப்படும் நெல் என்பன ஆலய நிருவாகத்தால் பொதியிட்டு பக்திபூர்வமாக விஷேட வழிபாடுகள் இடம் பெற்று ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு வருடா வருடம் இவ்வாறு வழங்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிர் வழங்குவதற்கான விஷேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு மு.கு சச்சிதானந்தம் அவர்களின் தலைமையிலான குருமார்களினால் மேற்கொள்ளப்பட்டு புதிர் நெல் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு வைக்கப்பட்டதன் பின் ஆலய பிரதம குரு மற்றும் ஆலய வண்ணக்குமார், மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள், ஆலய சிவபணியாளர்களினால் அடியார்களுக்கு வழங்கப்பட்டது.
இன்று காலையிலிருந்து வழங்கப்பட்ட புதிர் நெல் பொதிகளை பக்தர்கள் தான்தோன்றி அப்பனின் கொடையாக பெற்றுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
சுமார் 2500 க்கு மேற்பட்ட புதிர் நெல் பொதிகள் அடியார்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.