மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்



மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் மாவட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று (18.02.2025) செவ்வாய்க்கிழமையன்று மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளிஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பிராந்திய வைத்திய அதிகாரிகள்,  பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உள்ளுராட்சி அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





மட்டக்களப்பு மாவட்டத்தில் #சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து விரிவான விளக்கவுரைகளுடன் ஆரம்பமாகிய இக் கலந்துரையாடலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சுகாதார சவால்கள், தொற்று நோய்களின் பரவல், மருத்துவமனைகளின் வசதிகள் உட்படி  பல்வேறு விடயங்கள் பற்றியும்.

குறிப்பாக, மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும், டெங்கு போன்ற தொற்று நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. 

மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியோர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவது குறித்தும், கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை பரவலாக்குவது குறித்தும் விரிவாக பேசப்பட்டது. 

மேலும், மாவட்டத்தில் காணப்படும் தொழுநோய், திண்மக் கழிவு முகாமைத்துவம், மற்றும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஏனைய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புக்களை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடல், மாவட்டத்தின் சுகாதார துறை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய ஒரு தெளிவான படத்தை வழங்கியதுடன், அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடலுக்கு அடித்தளமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை