மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமார் ஏழு வருடங்கள் கடமை புரிந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம்(30-01-2025)ஆம் திகதி இடம்பெற்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின்போது பிரதேச செயலாளரினால் ஆற்றிய பணிகள் தொடர்பாக இதன்போது நினைவு கூறப்பட்டன.
குறிப்பாக கொவிட் தொற்று காலத்தில் இப்பிரதேசம் லொக் டவுன் செய்யப்பட்டபோது பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனிதாபிமானப்பணிகள், ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் இப்பகுதியில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் ,பொருளாதார நெருக்கடி காலத்தின் போது இப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான பணிகள் தொடர்பாக பதவி நிலை உத்தியோகத்தர்களால் உரை நிகழ்த்தப்பட்டன.
அத்துடன் எமது சமூகத்தின் கலை கலாச்சாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், ,மக்களின் உடனடிப் பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளினால் உரை நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, கணக்காளர் சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.ரவூப், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜரூப் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள்,சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளரின் சேவையைப் பாராட்டி பாடல் மற்றும் கவிதைகள் இடம்பெற்றதுடன் நலன்புரிச்சங்கத்தால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.