நிலவை மறைத்த மின்மினிகள்!
மட்டுநேசன்
சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் எவரும் பேசவோ நினைக்கவோ கூடாது என எண்ணும் தரப்புகளின் ஆட்டத்துக்கு தமிழ்த்தேசிய ஊற்றுக் கண்களில் ஒன்றாக விளங்கிய மாவை சேனாதிராஜா பலியாகிவிட்டார்.
தமிழ்த்தேசியம், போராட்டக்களம் என்பன தொடர்பாகப் பங்களித்தவர்களை 3 வகையாகத் தலைவர் வகைப்படுத்தியிருக்கிறார். உணர்வால் வந்தவர்கள், உணர்வூட்டப்பட்டு வந்தவர்கள், உணர்வின் விளைவால் வந்தவர்கள். இதில் மாவை அண்ணன் முதலாவது வகையைச் சேர்ந்தவர். 1973 ஆம் ஆண்டு போராட்ட நடவடிக்கைகளுக்கான பங்களிப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் அவர். மொத்தமாக 7 ஆண்டுகள் இனத்துக்காக, மொழி அடையாளத்துக்காக சிறையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழரசுக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் மாவைக்கும் கட்சிச் செயலருக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பில் இவர் உரையாற்றியபோது சிறையில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை வேறுசில கைதிகள் தன்னைத் தாக்கமுற்பட்டபோது பிரபல எழுத்தாளர் எஸ்.பொவின் மகன் அநுர தலையிட்டு தன்னைக் காப்பாற்றினாரென நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
அவர் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட காலத்தில் கிழக்கு மக்களின் ( குறிப்பாக அம்பாறை) நலனைக் கருத்திற்கொண்டு பணியாற்றினார்.
இறுதியுத்தத்தின் பின்னர் மாவீரர் நாள் தொடர்பான விடயங்களிலும் ஆர்வமாக இருந்தார். அரசைப் பொறுத்தவரை இதனை வடக்குப் பிரச்சினை என்றவாறு திசைதிருப்ப முயன்றது. இந்தப் போராட்டத்தில் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் என 3 மூன்று இனத்தவர்களும் பங்கெடுத்துள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே என்ற நிலைப்பாட்டிலிருந்த இவரது கனவுகள் எதிர்காலத்தில் சாத்தியமாகுமென நம்புகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரித்தார் இவர். தேசமாகத் திரள்வோம் என்ற கோஷத்தை முன்வைத்த பொதுவேட்பாளரின் பக்கமே இவர் நிற்கமுடியும். ஏனெனில் 1973 இல் இருந்தே தமிழ்த்தேசியத்துக்காகப் பாடுபட்டவரால் அப்படித்தான் சிந்திக்கமுடியும். கிளிநொச்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பொதுவேட்பாளரின் பணிமனைக்குச்சென்று அவரை ஆசீர்வதித்தார். இறுதி யுத்தம் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் தேவையில்லை, இனப்படுகொலை என்பதை சர்வதேசத்தில் நிரூபிக்கப் போதுமான சான்றுகள், ஆதாரங்கள் இல்லை என்று வாதிடும் தரப்பால் இதனைச் சகிக்க முடியவில்லை.
வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் கொண்டுவந்தார். இதனைச் சகிக்கமுடியாத சுமந்திரன் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இனத்தின் எதிர்காலத்தைவிட தமது அரசியல் எதிர்காலமே முதன்மையானது எனச் சிந்தித்தோர் சுமந்திரனைத் திருப்திப்படுத்தும் விதமாகச் செயற்பட்டனர்.
நடுநிலையாக நின்று சிந்தித்துச் செயற்படவேண்டிய சபை முதல்வர் சுமந்திரனைக் குளிரப்பண்ணுவதற்காக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஆளுநரிடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களையும் சுமந்திரனின் அரசுத் தரப்பு விசுவாதத்தையும் உணர்ந்துகொண்ட சம்பந்தன் ஐயா அந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சபைமுதல்வரை வரவழைத்த ஆளுநர் அந்தத் தீர்மானத்தைத் திரும்பக் கையளித்தார். அவ்வேளை இது முதலமைச்சருக்கான நியமனம் என அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. நாங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை நீங்கள் எப்படித் திரும்பப்பெறச் சொல்லமுடியும் என சி.வி.கே சிவஞானம், ப.சத்தியலிங்கம் , சயந்தன் போன்ற எவரும் சம்பந்தன் ஐயாவிடம் கேட்கத் துணியவில்லை. சம்பந்தன் ஐயா இன்னொரு காரியத்தையும் செய்தார். முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழா வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு தனது நிலைப்பாட்டை குறிப்பால் உணர்த்தினார். அசடுவழிய சுமந்திரனும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
கடந்த வருடம் சுமந்திரன், சம்பந்தன் ஐயாவைப் பழிதீர்க்கும் நோக்கில் உங்களுக்கு வயதாகிவிட்டது, பதவி விலகுங்கள் என்றார். எதுவும் நடக்கவில்லை. சாகும்வரை பதவியிலேயே இருந்தார்.
பொதுவேட்பாளரை ஆதரித்த மாவை ஐயாவைப் பழிதீர்க்க 18 பேர் கையொப்பமிட்டு அவர் பதவி துறக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். ப. சத்தியலிங்கமும் ,சி.வி.கேயும் உங்களை சுமந்திரன் பதவியிலிருந்து விலக்கிவிடுவார் என்று கடும் தொனியில் எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. தான் எந்த வழியில் எத்தனை ஆண்டுகள் தமிழ்த்தேசியத்திற்காக உழைத்தபோதும் யுத்தத்தின்பின் கட்சிக்குள் கொண்டுவந்த சுமந்திரன் தன்னைப் பதவி நீக்குவதா என்று நினைத்தால் மனஉளைச்சல் வரும்தானே. எப்படியோ இந்த 18 பேரும் அவரது சாவுக்குக் காரணமாகிவிட்டனர்.
சரி! நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஏக்கிய ராஜ்ஜிய தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவர சுமந்திரன் தலைகீழாக நின்றார். இது நிறைவேறாவிடில் தான் அரசியலிலிருந்து விலகிவிடுவேன் என்று சபதமெடுத்தார். நல்லாட்சியும் போய், கோத்தா அரசு,ரணில் அரசும் போயிற்று. அரசியலிலிருந்து விலகுவதற்கு தான் எழுதிய கடிதம் பாதியிலேயே உள்ளது என்று சொன்ன சுமந்திரன் அந்தக் கடிதத்தைப் பூர்த்திசெய்ய இதுதான் தருணம் எனக் கையொப்பமிட்டுள்ள (சுமந்திரனைவிட) 17 பேரும் அவருக்குக் கடிதம் எழுதுவார்களா? பூனைக்கு மணி கட்டுவது யார்?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிடாதீர்கள் என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் உட்பட ஒவ்வொரு தடவையும் மாவை அண்ணா பல்வேறு வழிகளிலும் சொல்லிப் பார்த்தார். ஆனால் என்ன நோக்கத்துக்காக கட்சிக்குள் சுமந்திரன் காலடி எடுத்து வைத்தாரோ அதைச் செய்துவிட்டார். தலைவரின் வேண்டுகோளின்படியே தான் உறங்குநிலையில் இருந்த தமிழரசுக் கட்சியை இயங்கு நிலைக்குக் கொண்டுவந்தார் மாவை. இன்று அந்தக் கட்சியிலிருந்தே அவரைச் சுமந்திரன் விலக்கிவிடுவார் என்று சத்தியலிங்கமும் சிவஞானமும் சொல்கிறார்கள் என்றால் யாரை நோவோம்? யாரிடத்தில் எடுத்துரைப்போம்?
அரசியல் காரணத்துக்காகச் சிறையிலடைக்கப்பட்டபின் விடுதலையானோரில் சிலருக்கு அன்றைய இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டு வரவேற்றனர். இவ்வாறு திலகமிடப்பட்டு வரவேற்கப்பட்டவர்களில் ஒருவர் மாவை அண்ணர். இந்த வரலாற்றை இந்தப் 18 பேருக்கும் எடுத்துரைக்க யார் முன்வருவார்?
“முதலில் கட்டளைகளை ஒழுங்காக நிறைவேற்றும் சிப்பாய்தான் பின்னர் ஆளுமையுள்ள கட்டளைத் தளபதியாக மிளிரமுடியும்” இது தலைவரின் வாக்கு. சம்பந்தன் ஐயா கட்சிக்குள் தொண்டனாக எப்போதும் இருந்திராத ஒருவரான சுமந்திரனை படிமுறையாக உள்ளூராட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் நிறுத்தாமல் நேரடியாகத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார். அன்றிலிருந்தே சுமந்திரன் தன்னை ஒரு குட்டி இளவரசனாகக் கற்பனைசெய்து ஆணையிட்டு வந்தார். அவர் வளர்ந்த சூழ்நிலையும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது. இன்று கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம். ஒவ்வொருவரினதும் தேசியத்துக்கான பங்களிப்பின் பெறுமதி அது புரியப்பட்ட காலத்தைப் பொறுத்தே கணிப்பிடவேண்டும். மாவை அண்ணாவின் பங்களிப்பை சுமந்திரன் புரியாததன் விளைவே இன்றைய இழப்பு. சரி! கட்சியின் மரணத்தையாவது தடுக்க இனியாவது சி.வி.கே. முயல்வாரா? இல்லையேல் சுமந்திரனின் ஆணையை நிறைவேற்றும் சிப்பாயாகத்தான் தொடர்ந்தும் இருப்பாரா?