வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் (14.03.2025) கொடியேற்றத்துடன் இடம்பெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
வருடாந்த திருநாள் திருப்பலி நிகழ்வு இன்றைய தினம் (15.03.2025) காலை 06.15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. வணக்கத்துக்குரிய தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் மற்றும் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அடிகளார் தலைமையில் இலங்கை இந்திய பங்குத் தந்தையர்களின் கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் புனிதரின் திருச் சொருப ஆசிர்வாதம் இடம்பெற்றது.
இன்றைய திருவிழாவில் நெடுந்தீவு பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய பி. பத்திநாதர், கொழும்பு பிரதேச பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய சிஸ்வான் டீ குரூஸ் உள்ளிட்ட இலங்கை இந்திய அருட்தந்தைகள் ஏராளமானோர் பங்குபற்றினார்கள்.
இத் திருவிழாவில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும், இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்களும் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் அவர்கள், அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இலங்கை கடற்படைத் தளபதி, வட மாகாண கடற்படை கட்டளை தளபதி உள்ளிட்ட கடற்படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்தியாவினைச் சேர்ந்த 8500 ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வழங்கல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.