இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம்!



இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது.
இந்தநிலையில், குறித்த திருத்தத்தினால் மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக பீட்டர் புவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு சுமையாக அமையக் கூடும் எனவும் பீட்டர் புவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலை பொறிமுறைமையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பீட்டர் புவர் அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை