நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்றைய தினம் (20-03-2025) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முற்போக்கு தமிழர் கழக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், முற்போக்கு தமிழர் கழக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பிராசா தஜீவரன், இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், உள்ளிட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் அங்கம் பெற்றும் முக்கிய இரு கட்சிகளின் முக்கியஸ்தர்களினால் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் காலை 9:30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் தமிழர் தரப்பில் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று, ஏறாவூர் பற்று, மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று உள்ளிட்ட பிரதேச சபைகளிலும் ஏறாவூர் நகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளிலும் என மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.