வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி கும்பலை காட்டிக்கொடுத்த CCTV



வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை, பாண்டிருப்பு உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் வீடுகள் உடைக்கப்பட்டும் மாடுகள் உட்பட பெறுமதியான பல பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய வெள்ளிக்கிழமை (04-04-2025) அதிகாலை குறித்த கொள்ளைக்குழுவிலுள்ள 2 சந்தேக நபர்கள் சிசிடிவி காணோளி மற்றும் பொதுமக்களின் தகவல்களின் அடிப்படையிலும் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன், சுமார் 25 வயது முதல் 28 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.ஏனைய கொள்ளைச் குழுவிலுள்ள மூவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர் குழு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து களவாடிச்செல்லப்பட்ட எரிவாயு சிலின்டர்கள் 5க்கும் அதிகமானவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய களவாடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை